மீறும் இலஞ்சிக் குறத்தியைக் கொண்டசெவ்
வேட்குற வன்முதல் வேட்டைக் குப்போனநாள்
ஆறுநாட் கூடீ ஒருகொக்குப்பட்ட
தகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில்
சாறாக வைத்தபின் வேதப் பிராமணர்
தாமும்கொண்ட டார்சைவர் தாமும்கொண் டார்தவப்
பேறா முனிவரும் ஏற்றுக்கொண் டார்இதைப்
பிக்குச்சொல் லாமலே கொக்குப் படுக்கவே.
[கண்ணிகொண்டு வாடா குளுவா! கண்ணிகொண்டுவாடா]
திருக்குற்றாலக் குறவஞ்சியில் "சிங்கன், குளுவனைப்பார்த்துக் கண்ணிகொண்டு
வரச்சொல்லுதல்" பாடலில் வருவது.
"கொக்கை அவித்தொரு சட்டியில் சாறாக வைத்தபின் வேதப் பிராமணர் தாமும் கொண்டடார் சைவர் தாமும்கொண்டார் தவப்பேறா முனிவரும் ஏற்றுக்கொண்டார்"
இது ஒரு சிலேடை.
இதை அப்படியே படித்தால் வரும் அர்த்தம் நமக்கு புரியும். அதாவது சிங்கன் என்கிற வேடன் அவன் தோழன் குளுவனிடம் சொல்லுவதாக வரும் பாடல். வேட்டையாடுவது ஒன்றும் தப்பில்லை, (இதற்கு முன் வரும் சில வரிகளில் சொல்லுவான்) கடவுள்கள் எல்லாம் வேட்டையாடித்தான் பறவைகளை (அன்னம், பருந்து), விலங்குகளை (பெருச்சாளி,மயில்) தம் வாகனங்களாக கொண்டுள்ளனர். இதோ பார், முருகன் வள்ளியை மணமுடித்ததால், அவனும் குறவனே, அவன் வேட்டைக்கு போய் ஆறு நாட்களுக்குப் பின் ஒரு கொக்கை பிடித்துவந்து, அதை சட்டியில் அவித்து(சமைத்து) சாறாக வைத்த பின் (குழம்பாக வைத்த பின்), வேதப் பிராமணர், சைவர், தவ முனிவர்கள் எல்லோரும் ஏற்றுக்கொண்டனர் (அக்குழம்பு சுவை கண்டு உண்டனர்).
இன்னொரு அர்த்தம் பார்க்கும் முன் சில சொற்களின் பொருள்களைப் பார்ப்போம்.
கொக்கு - மாமரம்
சட்டி - சஷ்டி (ஆறாவது நாள் - சஷ்டி)
சாறு - திருவிழா
இப்பொழுது அப்பாடலை மீண்டும் படியுங்கள்:
ஆறுநாட் கூடீ ஒருகொக்குப்பட்ட
தகப்பட்ட கொக்கை அவித்தொரு சட்டியில்
சாறாக வைத்தபின் வேதப் பிராமணர்
தாமும்கொண்ட டார்சைவர் தாமும்கொண் டார்தவப்
பேறா முனிவரும் ஏற்றுக்கொண் டார்
ஆறாவது நாள் - சஷ்டியில்/சட்டியில், கொக்கினை -மாமரம் வடிவம் கொண்ட சூரனை, வீழ்த்தி, அதை சாறாக - திருவிழாவாக வைத்தான். அதை எல்லோரும் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டனர்.
### சிலேடை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக