புதன், 28 அக்டோபர், 2015

தங்கைச்சி தங்கச்சிலை!

அந்தாதி என்றால் முன் பாட்டின் அந்தம் (முடிவு), அடுத்தப்பாட்டின் ஆதி (ஆரம்பம்) - நமக்கு தெரிந்த விசயம் தான்.

அபிராமி அந்தாதி கேட்கும் போது, முதல் பாடல் முடியும் முன்னே மனம் அடுத்தப்பாடலுக்கு தாவிடுது.

இதுல இந்த "தங்கைச்சி - தங்கச்சிலை" அந்தாதி அப்படியே நச்!

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து,
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய், நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய், என்ன பேறு பெற்றேன்.--
தாயே, மலைமகளே, செங்கண் மால் திருத் தங்கைச்சியே.


தங்கைச்சியே! - திரு தங்கைச்சி - திரு(மாலின்) தங்கை - மாலின் திரு (சிறப்பு/அழகு மிக்க) தங்கை. சிலேடை  - அபாரம்!!

[சந்தி வந்ததினால் அதை மாலின் திருத் தங்கைன்னு தான் படிக்கணுமா?]

அடுத்தப் பாட்டுல இன்னும் தங்கைச்சியை பத்தி என்ன சொல்லப் போறாரோன்னு மனசுல நினைக்கும் போதே, இதோ எப்படி தடம் மாறுகிறார் (track change).

தங்கச் சிலை கொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங் கண் கரி உரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகனகச்
செங் கைக் கரும்பும், மலரும், எப்போதும் என் சிந்தையதே.


தங்கச்சிலை கொண்டு - தங்க  சிலை - சிலைன்னா வில் - பொன்மலையை வில்லாக கொண்டு (பொன் மலைன்னா மேருமலைன்னு முந்தின பதிவுல மேற்கோள் கொடுத்திருக்கேன்).
தங்கச்சிலை கொண்டு - தங்கச்சிலை - தங்கச்சிற்பம் போன்ற அபிராமியை கொண்டவன்ன்னு பொருள் எடுத்துக்கலாமா? சிலேடையாக!

அபிராமி! அபிராமி!!

திரிகூடராசப்ப கவிராயர் படைத்த நூல்கள்

ஒருவர் ஒரே விசயத்தைப் பற்றி எவ்வளவு தடவை  பேசமுடியும்? பாடமுடியும்?

- ஒன்றைப் பற்றி ஒரே விதமாக அல்ல; விதவிதமாக.

திரிகூடராசப்ப கவிராயர் - இவர் படைத்த நூல்கள்:


  1. திருக்குற்றாலக் குறவஞ்சி
  2. திருக்குற்றலத் தலபுராணம்
  3. திருக்குற்றால மாலை
  4. திருக்குற்றாலச் சிலேடை வெண்பா
  5. திருக்குற்றால யமக அந்தாதி
  6. திருக்குற்றால நாதர் உலா
  7. திருக்குற்றால ஊடல்
  8. திருக்குற்றாலப் பரம்பொருள் மாலை
  9. திருக்குற்றாலக் கோவை
  10. திருக்குற்றாலக் குழல்வாய்மொழி மாலை
  11. திருக்குற்றாலக் கோமளமாலை
  12. திருக்குற்றால வெண்பா அந்தாதி
  13. திருக்குற்றாலப் பிள்ளைத்தமிழ்
  14. திருக்குற்றால நன்னகர் வெண்பா

உசாத்துணை - https://ta.wikipedia.org/wiki/திரிகூடராசப்பர்

அடேங்கப்பா!  என்னாஆ கற்பனைவளம்யா!

இதுல குறவஞ்சி படித்துக்கொண்டிருக்கிறேன். மற்றவைகளையும், குறிப்பா திருக்குற்றாலச் சிலேடை வெண்பா படிக்க ஆசை, பார்ப்போம், எப்ப முடியுதோ.

எட்டு மலை ஏழு கடல்

"ஏழு மலை ஏழு கடல் தாண்டி"ன்னு தானே நமக்கு தெரியும்.

இங்கே ஒருவர் "எட்டு மலை ஏழு கடல்"ன்னு பாடுறார். 
பன்னிருகை வேல்வாங்கப் பதினொருவர்
   படைதாங்கப் பத்துத் திக்கும்
நன்னவவீ ரரும்புகழ மலைகளெட்டும்
   கடலேழும் நாடி ஆடிப்
பொன்னின்முடி ஆறேந்தி அஞ்சுதலை
   எனக்கொழித்துப் புயநான் மூன்றாய்த் 
தன்னிருதாள் தருமொருவன் குற்றாலக்
   குறவஞ்சித் தமிழ்தந் தானே.
                          - திருக்குற்றாலக் குறவஞ்சி
அதுவும் நீங்க எதிர்ப்பார்த்தே இராத இந்த கடலைகளைப்  பற்றி கேளுங்க.

கடல்கள் ஏழு - நன்னீர், உவர் நீர், பால், தயிர், நெய், தேன், கருப்பஞ்சாறு (கரும்பு)

https://ta.wikipedia.org/wiki/சொல்_(எண்_தொகை) கூட ஏழு மலைகளைத் தான் சொல்லுது.

இவர் சொல்லுற மலைகள் எட்டு - கைலை, மந்தரம் (பாற்கடலை கடைய மத்தாக பயன்பட்ட மலை), இமயம், விந்தம் (விந்திய மலை??), நிடதம் (நளமகாராஜாவுடைய நாடு - நிடதம் - இன்றைக்கு எந்த ஊரோ?), ஏமகூடம் (மேருமலை - குமரிக்கண்டத்தில் இருந்த மேருமலையின் தொடர்ச்சி இலங்கையில் இருக்கா? மேருமலையில் தான் சூரசம்ஹாரம் நடைப்பெற்றதாக கந்தப்புராணம் சொல்லிகிறதாம்), நீலமலை (நீலகிரி), கந்தமாதனம் (திருச்செந்தூர் கோயிலுக்கு வடக்கே உள்ள மலைன்னு சொல்லுறாங்க - இன்றைக்கு எந்த ஊர்?)



இந்த திருக்குற்றால குறவஞ்சி முருகன் பாட்டுல எனக்கு பிடித்த சொல்  - அஞ்சுதலை  -- அஞ்சுதல் (அச்சப்படுதல்) மற்றும் ஐந்து தலை. ஆஹா!

குறளை படிப்போம்; குறளை தவிர்ப்போம்

திருக்குறள் - என்பதில் குறள் என்றால் என்னன்னு தெரியுமா?

அது ஒரு காரணப்பெயர்.
குறள் - குறுமை; ஈரடி உயரமுள்ள குள்ளன்
குறள் என்றால் சிறுமை என்று கூட அர்த்தமாம், நான்கு வகை இழிசொற்களில்(பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்சொல்) ஒன்றாக இதை குறிப்பிடுகின்றனர்.

(திருக்)குறளை படிப்போம்  குறளை(சிறுமையை) தவிர்ப்போம் !

(பூம்)பாவாய் ஆம்பல் ஆம்பல்

"(பூம்)பாவாய் ஆம்பல் ஆம்பல்"
ஆம்பல் என்றால் அல்லி மலர்ன்னு இந்த பாட்டுக்கு அப்புறம் நமக்கு தெரியும்.
ஆம்பல் என்றால் யானைன்னு கூட ஒரு அர்த்தம் இருக்கு.
இப்ப அந்த வரியை "பூ" விடுத்து படிக்கவும். [கவிஞர் பூ போட்டு தப்பித்துக்கொண்டார் ;)]
சிலேடை!!

குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துக்களை எளிமையாக அறிமுகப்படுத்துவது எப்படி - ஒரு வழிகாட்டி

குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துக்களை எளிமையாக அறிமுகப்படுத்துவது எப்படி - ஒரு வழிகாட்டி 
எல்லா ஆங்கில எழுத்துக்களுக்கும் அடிப்படை - Standing Line (நேர் கோடு), sleeping line (மட்ட கோடு), slanting line (சாய்வான கோடு), curve (வளைவு)
குறிப்பு - ஆங்கில வார்த்தைக்கு ஏற்ற தமிழ் சொல் சரியா என தெரியவில்லை, நானாக அதை தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளேன். தவறு சுட்டிக் காட்டப்பட்டால் திருத்திக்கொள்வேன் smile emoticon
இந்த அடிப்படை வைத்துக்கொண்டு குழந்தைகள் 26 ஆங்கில எழுத்துக்களையும் எளிதாக விரைவாக எழுதக் கற்றுக்கொள்கிறார்கள்.
ஆனால் தமிழில்? 
நான் என் பொண்ணுக்கு முதலில் உயிர் எழுத்து வரிசையை அடையாளம் காண சொல்லிக் கொடுத்ததால், எழுத ஆரம்பிக்கும் போதும் உயிர் எழுத்திலிருந்தே ஆரம்பித்தேன். 
அ - ஓர் வட்டம், ஒரு தலைகீழ் வளைவு, ஒரு மட்ட கோடு, ஒரு நேர் கோடு (one circle, reverse curve (as in D), sleeping line, standing line).
ஆ - அ போட்டு ஒரு சுழி.
இ - அ மாதிரி போட்டு (கடைசி நேர் கோடு மட்டும் போடாமல்), ஒரு skipping rope.
3-4 வயது குழந்தைக்கு இது கொஞ்சம் நீண்ட கட்டளைகள் தான். 
குழந்தைகளுக்கு கற்பிக்கும் போது ஆர்வத்தை தக்க வைத்துக்கொள்ள - உன்னால் முடியும் (you can), ரொம்ப எளிது தான் (so simple), முடித்துவிட்டாய் (you did it / you have done this), அடுத்தது (what next) போன்றவை ரொம்ப முக்கியம். இல்லையென்றால் ஆர்வம் போய் விடும், திரும்ப முயற்சி செய்ய ரொம்பவும் யோசிப்பார்கள். Kids generally dont like to lose the game, always want to be the winner or they chose their winning game. If it sounds very generalized statement, then atleast my daughter is like this.
"இ" எழுத ரொம்ப பயிற்சி செய்தாள், ஆனா இதுவே மற்ற எழுத்துக்களுக்கும் நீண்டால் ஆர்வம் போய்விடும் அபாயம் உள்ளது.
நாம் எப்படி (எந்த வரிசையில்) கற்றுக்கொண்டோம்? ஞாபகத்தில் இல்லை. இதற்கு எளிய தீர்வு தான் என்ன?
இருக்கிறது - அதுவும் இணையத்தில்.
http://tamilvu.org/courses/couindex.htm (அடிப்படை நிலையை சொடுக்கவும்).
இந்த வரிசைப் படி அறிமுகப்படுத்தலாம் (வேண்டுமென்றால் அவரவர்க்கு எற்ற மாதிரி சிறு திருத்தங்கள் கூட செய்துகொள்ளலாம்)
ட ப ய ம ழ
ர ச க த
அ ஆ இ ஈ
ந ங
ல வ
எ ஏ ஞ


ற ஐ
ள ன ண
ஒ ஓ ஓள 
Interactive lessons (ஊடாடும் பாடங்கள் ???) அருமை, இறுதியில் வரும் மழழையர் பாடல் மிக எளிமை, அருமை, முத்து முத்தானவை!!!
உங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலே தமிழ் எழுத சொல்லிக்கொடுக்க உங்களுக்கு அருமையான வழிகாட்டி!

வெகுளி

வெகுளி என்ற சொல்லை "அப்பாவி / கபடம் இல்லாதவர் " என்ற பொருளில் தான் நாம் சாதரணமாக பயன்படுத்துகிறோம்/கேட்கிறோம்.
ஆனால் வெகுளி என்றால் கோபம்/சினம்.

         அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 
         இழுக்கா இயன்றது அறம்.

இக்குறளை படிக்கும் போது, இங்கு ஏன் வெகுளி பயன்படுத்தப்பட்டிருக்குதுன்னு அறிய முற்பட்ட போது தான் இதன் பொருள் விளங்கிற்று. அது மட்டும் அல்ல, வள்ளுவர் வெகுளாமை பற்றி ஒரு அதிகாரமே எழுதியிருக்கிறார்.
வெகுளாமையில் நமக்கு நல்லா தெரிந்த குறள் ஒன்று இதோ:
        நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் 
        பகையும் உளவோ பிற. (வெகுளாமை - 304)


வெகுளின்னா அப்பாவின்னு எப்படி எப்போதிருந்து பழக்கத்தில் வந்தது. அப்படின்னா "அவர் ஒரு வெகுளி"ன்னு சொல்லுறது வஞ்சப் புகழ்ச்சி அணியா ???? smile emoticon

கற்கை நன்றே!

"யாம் அறிந்த மொழிகளிலே" ன்னு சொல்லத் தான் ஆசை.

ஆனா, எனக்கு தெரிந்த ஒரே மொழி தமிழ் தான். அதன் பொருட்டே இம்மொழி மீதொரு தீரா காதல் கூட.

இந்த இனிமையான இளமையான தமிழை கற்க கற்க அது தரும் போதை, ஆஹா, இன்னும் இன்னும் என ஏங்க வைக்கிறது என்னை.

கற்பது தமிழ்!
கற்றல் நலமே!!